கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது. பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடும் மற்றொரு வழக்கறிஞராக இயக்குநர் மிஷ்கின் நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம். சி.எஸ். இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து வெளியான படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. முன்னதாக, இப்படம் ஜூலை 24-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், வரும் நவம்பர் 20-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது. இந்நிலையில், படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணைவு மற்றும் படத்தின் மாறுபட்ட கதைக்களம் ஆகியவற்றால் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் டீசரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.