கிச்சா சுதீப்பின் ‘தேவராயா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப், தனது அடுத்தடுத்த படங்களால் கவனம் ஈர்த்து வருகிறார். தமிழில் ‘நான் ஈ’, ‘அருந்ததி’, ‘புலி’ உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். அவரது நடிப்பில் வெளியான ‘மேக்ஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.தற்போது அனூப் பந்தாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தில் சுதீப் நடித்து வருகிறார். திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவருக்கு, பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற மன்னரான ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘தேவராயா’ திரைப்படத்தில் சுதீப் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் 2027-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் சுப்ரியன்வி பிக்சர் ஸ்டுடியோ இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இதன் தலைப்பு அறிவிப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது.அதில் பாரம்பரிய அரச உடையில், நவரத்தினங்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட பிரம்மாண்டமான கிரீடத்துடன் சுதீப் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.