கட்சியா இல்லை நார்கோஸ் கூடாரமா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி
நாகையில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், த.வெ.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு அக்கட்சியின் மற்றொரு நிர்வாகி கொலை மிரட்டல் விடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: நாகையில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை வைத்திருந்ததாக த.வெ.க நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்த செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு, த.வெ.க நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பூபாலன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிப் பொறுப்பில் இருக்கும் மற்றொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானவருக்கு ஆதரவாகப் பேசுவதுடன், செய்தியாளர்களையும் மிரட்டுவது ஏன்? த.வெ.க ஒரு அரசியல் கட்சியா அல்லது போதைப்பொருள் கடத்தல் கும்பலின் புகலிடமா என்று கேட்கும் அளவுக்கு, அக்கட்சியுடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்பின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன.