காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பின்பற்ற வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு, மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா, கேரள முதல்-மந்திரி சதீசன், புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.மாநாட்டில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தென்மாநிலங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்மாநிலங்களின் பங்கு 30 சதவீதமாக இருப்பதாகவும், நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் விஜய் கோரிக்கை விடுத்தார். நீட் தேர்வு காரணமாக கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.பெங்களூரு மெட்ரோ ரெயில் சேவையை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும், இது இரு பகுதிகளுக்கும் பயனளிக்கும் சிறந்த உள்கட்டமைப்பாக அமையும் என்றும் கூறினார்.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு உரிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.தென்மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் விஜய் கோரினார். மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக தென்மாநிலங்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கடைமடை மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், மாநிலங்களின் நிதி தன்னாட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.தமிழ்நாட்டுக்கு உரிய மற்றும் நியாயமான நிதிப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும், மாநிலங்களின் செயல்திறன் மற்றும் வளர்ச்சி முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு நிதி பகிர்வு செய்ய வேண்டும் என்றும் விஜய் கூறினார்.மேலும், தென்மாநிலங்களை இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரம்புகளை நிர்ணயிப்பதில் மாநிலங்களுக்கு இருந்த நெகிழ்வுத்தன்மை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும், கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் விஜய் தெரிவித்தார். சகோதர மாநிலங்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்றும் அவர் கூறினார்.