காவல் மரணங்கள் தொடர்வதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
காவல் மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்றும், காவல்துறையில் உடனடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலத் தலைவர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி சபரிவர்மன் காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் நீங்காத நிலையில், கடந்த ஜூலை 17, 2026 அன்று விசாரணைக்காக தூத்துக்குடி காவல்துறையினர் அழைத்துச் சென்ற அருணாசலம் காவலில் உயிரிழந்தது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.விசாரணைக்காக ஒருவரை காவல்துறையினர் அழைத்துச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. இருப்பினும், அவற்றை பின்பற்றாமல் அதிகார அத்துமீறல்கள் தொடர்வதும், அதன் விளைவாக மனித உயிர்கள் பலியாகும் சம்பவங்கள் அதிகரிப்பதும் மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இத்தகைய சம்பவங்கள் தமிழ்நாடு காவல்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாடு மற்றும் செயல்திறனை இழந்துவிட்டதா என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு கூட காவல்துறையின் அணுகுமுறையிலும் செயல்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதை கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நபர்களின் உயிர் மற்றும் மனித கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபடும் காவல்துறையினருக்கு கடுமையான நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகளை உறுதி செய்யும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.காவல் மரணங்களை முற்றிலும் தடுக்க காவல்துறை நிர்வாகத்தில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி காவல் மரணத்தில் உயிரிழந்த அருணாசலத்தின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.