கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், காதல் திருமணம் செய்துகொண்ட தனது கணவர் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், பின்னர் தன்னை கைவிட்டதாகவும் புகார் அளித்துள்ளார். குளித்தலை பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், கல்லூரியில் படித்தபோது கார்த்திக் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சுமார் ஓராண்டு காலம் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், இளம்பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. அப்போது கர்ப்பத்தை கலைக்குமாறு கணவர் கார்த்திக்கின் பெற்றோர் வற்புறுத்தியதாகவும், அவர்களின் பேச்சைக் கேட்டு கார்த்திக் தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் இளம்பெண் தெரிவித்துள்ளார்.
Advertisement
இதைத்தொடர்ந்து, கணவர் தன்னை தனியாக விட்டுவிட்டு பிரிந்து சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்ததாகவும், ஆனால் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள இளம்பெண், தனது கணவர் கார்த்திக் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகியோர் மீது உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.