புதுடெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. மாநாட்டின் 2-வது நாள் அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையே அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த ஆண்டு மாநாட்டில் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய 4 முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். உறுப்பு நாடுகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்ததன் மூலம், பொதுவான இலக்குகளை அனைவருக்கும் பயனளிக்கும் கூட்டுச் செயல்பாடுகளாக மாற்ற முடிந்ததாக பிரதமர் கூறினார். பிரிக்ஸ் இணைப்பு திட்டத்தின் வாயிலாக திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அறிவு, நிதி மற்றும் புதிய சந்தைகளுடன் இணைக்கும் நோக்கில், பிரிக்ஸ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒத்துழைப்பு இணையதளத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நகரங்களுக்கு இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு உதவும் வகையில் பிரிக்ஸ் நகர்ப்புற போக்குவரத்து மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Advertisement
பிரிக்ஸ் அமைப்பின் மூலம் நட்பு, கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்த ஒத்துழைப்பு அரசுகளுக்கு இடையிலான நடவடிக்கைகளாக மட்டும் இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்தியா செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தொழில் முனைவோர், விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து பிரிவினரும், பொதுமக்களுடன் சேர்ந்து பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம் என்றும் அவர் கூறினார். பிரிக்ஸ் டிஜிட்டல் வேளாண்மை கூட்டமைப்பு விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது கட்டமைப்பு ஆகியவற்றை விவசாயிகளின் உண்மையான தேவைகளுடன் ஒருங்கிணைக்க முடியும் என அவர் கூறினார். தொழில்நுட்பம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளங்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது பொதுவான முன்னேற்றத்துக்கு தடையாக மாறக்கூடும் என்றும் பிரதமர் மோடி எச்சரித்தார். எனவே, புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.