மதுரையில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் நல்லாட்சியில் உலகத் தமிழர்களின் பெருமையாக விளங்கும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பங்கேற்று, இறைவனை தரிசனம் செய்து மகிழ்ந்து வருவது தமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். குடமுழுக்கு விழாவுக்கான திருப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒத்துழைத்த அனைத்து துறை அலுவலர்கள், அறங்காவலர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும், கடந்த ஒரு வாரமாக தமிழ் பக்திப் பாடல்களை இசைத்து, கோபுரங்களின் உச்சியில் தமிழின் இனிமையை ஒலிக்கச் செய்து குடமுழுக்கு விழாவில் சிறப்பாக பங்கேற்ற ஓதுவார்கள் மற்றும் சைவ ஆதீனங்களுக்கும் அவர் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். வரலாற்றுப் பெருமை கொண்ட மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நிறைவு பெற்றிருப்பது தமிழ்நாட்டிற்கே பெருமை அளிக்கும் நிகழ்வாகும் என்றும் அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இறையருளால் அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளம் பெருக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.