ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓய்வூதியத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டாலும், பயனாளிகள் அச்சப்படத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 12 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் மூலம் மொத்தம் 35,37,372 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதில், சுமார் 15,56,674 பயனாளிகளுக்கு, ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான ஓய்வூதியம் ஏற்கனவே அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை செப்டம்பர் 2026-ல் வழங்கப்பட வேண்டியதாகும். மேலும், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 திட்டங்களில் சுமார் 19,20,858 பேர் பயனடைந்து வருகின்றனர்.