மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் பகுதியில் அமைந்துள்ள 4-வது கழுங்கடி அருள்மிகு ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில், 38-வது ஆண்டு கிடாய் வெட்டு திருவிழா மற்றும் மாபெரும் சமபந்தி கறிவிருந்து அன்னதானம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய சுமார் 450 ஆட்டுக் கிடாய்கள்முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, விடிய விடிய சமையல் பணிகள் நடைபெற்று, 10,000 கிலோ அரிசி மற்றும் டன் கணக்கிலான மசாலாப் பொருட்கள் பயன்படுத்தி பிரமாண்ட கறிவிருந்து தயாரிக்கப்பட்டது. இன்று காலை முதல் நடைபெற்று வரும் மகா அன்னதானத்தில், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
Advertisement
25,000-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து கறிவிருந்தை பிரசாதமாக உண்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளக்கல் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பாரம்பரிய திருவிழாவில், முனியாண்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அரசியல் பிரமுகர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரையின் பாரம்பரிய முனியாண்டி விலாஸ் உணவகங்களின் பின்னணியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்த பிரமாண்ட கறிவிருந்து விழா, வெள்ளக்கல் பகுதியில் திருவிழா சூழலை ஏற்படுத்தியுள்ளது.