ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த நீர்வரத்து தற்போது திடீரென குறைந்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, பிற்பகலில் 6,500 கனஅடியாக சரிந்துள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்தே ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் வழக்கமாக உள்ளது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6 மணி நிலவரப்படி அதே அளவில் தொடர்ந்தது.இதன் காரணமாக ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பரிசல் இயக்குவதற்கான தடை 11-வது நாளாக நீடிக்கிறது.