ஏஐ மனிதர்களின் வேலைகளை பறிக்காது; கல்வியில் புதிய மாற்றங்கள் வரவுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்காது என்றும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு *Prompt Engineering* பாடத்திட்டத்தில் இடம்பெறும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இனி தமிழகத்தின் கல்வி முறையில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினார். கற்றலை மாணவர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றுவது அரசின் நோக்கம் என்றும், பள்ளி மாணவர்களின் புத்தகப்பை சுமை குறையும்போது அவர்களின் மனஅழுத்தமும் குறையும் என்றும் தெரிவித்தார்.பள்ளி மாணவர்கள் சுமக்கும் புத்தகங்களின் எடை குறித்து குறிப்பிட்ட அவர், நிலவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் எடுத்துச் சென்ற சுமையை விட மாணவர்கள் அதிக சுமையை சுமக்க வேண்டிய நிலை இருப்பதாக கூறினார். இதை மாற்றும் வகையில் பாடப்புத்தகங்கள் வண்ணப்படங்களுடன் கூடிய வடிவத்தில் மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் கல்வி முறையை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கதைகளின் மூலம் கணிதம் கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் புதுப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அதேபோல், எதிர்கால தொழில்நுட்ப தேவைகளை கருத்தில் கொண்டு *Prompt Engineering* பாடமாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறிவு குறித்து பேசுகையில், ஏஐ மனிதர்களின் வேலைகளை பறிக்கும் என்ற அச்சம் தேவையில்லை என்று அவர் வலியுறுத்தினார். மேலும், "இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா பெற்ற பிச்சை சுந்தர் பிச்சை. அவர் இல்லையெனில் கூகுள் இல்லை" என்று குறிப்பிட்டார்.அறிவியல் துறையில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியாக, இஸ்ரோவின் ஒத்துழைப்புடன் மாணவர்கள் சிறிய செயற்கைக்கோள்களை உருவாக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். மாணவர்கள் தயாரிக்கும் அந்த செயற்கைக்கோள்களுக்கு இஸ்ரோ வாய்ப்பு வழங்கினால், அவை சந்திரனையும், நாட்டையும் சுற்றிவரும் நிலையை உருவாக்கும் வகையிலான கல்வித் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.