மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் எல்.முருகன் விலகியதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கு நவம்பர் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி முதன்முறையாக மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற அவருக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைகளில் இணை அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டன. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றபோதும், எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ஆகியவற்றின் பொறுப்புகள் அவருக்கு ஒதுக்கப்பட்டன.
Advertisement
இந்நிலையில், கடந்த 14-ம் தேதி தனது அமைச்சர் பதவியை எல்.முருகன் திடீரென ராஜினாமா செய்தார். தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார். தனது முடிவை விளக்கி, பிரதமர் மோடிக்கு ஐந்து பக்கக் கடிதத்தையும் அவர் அனுப்பியிருந்தார். கடந்த 11-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்து சென்ற மூன்று நாட்களுக்குள் எல்.முருகன் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது காலியாகியுள்ள மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் நவம்பர் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடத்தின் பதவிக்காலம் 2030-ம் ஆண்டு வரை உள்ளது. தேர்தல் நடைபெறும் அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த இடைத்தேர்தலில் தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.