எம்.எல்.ஏ. மகனை சித்தரித்த காட்சிக்கு எதிர்ப்பு... சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து வீடியோவை திருத்திய பரிதாபங்கள் குழு
தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் மகனை கிண்டல் செய்யும் விதமாக பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபி மற்றும் சுதாகர் வெளியிட்டதாகக் கூறப்படும் வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் உணர்ச்சிபூர்வமாக பேசிய வீடியோவை நகைச்சுவை வடிவில் மாற்றி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்திற்கு திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா தனது சமூக வலைதள பதிவில், வேதனையில் இருந்த ஒரு சிறுவனை நகைச்சுவைக்காக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும், திறமையான கலைஞர்களாக அறியப்படும் அவர்கள் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், சிறுவனின் உணர்வுகளை நகைச்சுவைக்காக பயன்படுத்தியதை பலரும் விமர்சித்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.இதையடுத்து, பரிதாபங்கள் குழுவைச் சேர்ந்த கோபி மற்றும் சுதாகர் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், அண்மையில் தங்களது சேனலில் வெளியான "ஆடி மாச பாவங்கள்" என்ற வீடியோவில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி சிலரின் மனதை புண்படுத்தியதாக தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.மேலும், அந்தக் காட்சி யாரையும் தனிப்பட்ட முறையில் குறிவைத்து உருவாக்கப்படவில்லை என்றும், இருப்பினும் அது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதால், சர்ச்சைக்குரிய பகுதியை வீடியோவிலிருந்து நீக்கியுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளனர். பரிதாபங்கள் குழுவின் நோக்கம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல என்றும் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.