தமிழகத்தில் இன்று (அக்டோபர் 10) கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த சில நாட்களிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் உள் தமிழகம் மற்றும் உள் கர்நாடகா வழியாக வடக்கு மத்திய மகாராஷ்டிரா வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காணப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது. திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Advertisement
வெப்பநிலை நிலவரம்: அக்டோபர் 10ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11 முதல் 14ஆம் தேதி வரை வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், வெப்பநிலை சற்று அதிகரிக்கக்கூடும். அக்டோபர் 10 முதல் 14ஆம் தேதி வரை வடக்கு உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். கடல் பகுதிகளுக்கான எச்சரிக்கை: தமிழகக் கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.