எக்ஸ் செயலியில் புதிய நிதி வசதி: அமெரிக்க பயனர்களுக்கு எலான் மஸ்க் அறிவித்த ‘எக்ஸ் மனி’ சேவை
சமூக வலைதளமான எக்ஸை அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒருங்கிணைந்த செயலியாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, எலான் மஸ்க் **‘எக்ஸ் மனி’** என்ற புதிய நிதி சேவையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த சேவை தற்போது அமெரிக்காவில் உள்ள எக்ஸ் பிரீமியம் மற்றும் பிரீமியம் பிளஸ் சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.இந்த புதிய வசதியின் மூலம், எக்ஸ் செயலியிலேயே வைப்புக் கணக்கு தொடங்குதல், பயனர்களுக்கிடையே உடனடி பணப் பரிமாற்றம் மேற்கொள்ளுதல், மின்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பில்களை செலுத்துதல், வங்கி பரிவர்த்தனைகள் செய்தல் மற்றும் காசோலை அனுப்புதல் போன்ற நிதி சேவைகளை பயன்படுத்த முடியும். மேலும், தகுதியான பரிவர்த்தனைகளுக்கு 3 சதவீத கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.எக்ஸ் மனி சேவையின் வாயிலாக அமெரிக்காவின் கிராஸ் ரிவர் வங்கியில் வைப்புக் கணக்கைத் தொடங்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன், எக்ஸ் பயனர்களுக்கிடையே எந்தக் கட்டணமும் இல்லாமல் உடனடி பணப் பரிமாற்றம், நேரடி சம்பள வரவு, பில் செலுத்துதல், அஞ்சல் மூலம் காசோலை அனுப்புதல் மற்றும் கட்டணமில்லா ஏடிஎம் பணம் எடுக்கும் வசதிகளும் ஒரே தளத்தில் கிடைக்கின்றன.இந்த புதிய சேவையின் மூலம், சமூக வலைதளத்தை மட்டுமல்லாமல் நிதி சேவைகளையும் ஒரே செயலியில் வழங்கும் தனது நீண்டகால ‘எல்லாவற்றிற்குமான செயலி’ என்ற இலக்கை எலான் மஸ்க் மேலும் முன்னெடுத்து வருகிறார். அமெரிக்காவில் இந்த சேவை வெற்றிகரமாக செயல்பட்டால், பின்னர் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.