‘மலைகளின் அரசி’ என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்கா, பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவில் ஆயிரக்கணக்கான வகைகளைச் சேர்ந்த ரோஜா செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஊட்டியில் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ள நிலையில், தினமும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், ரோஜா பூங்காவுக்கு வரும் பயணிகளுக்கு எதிர்பார்த்த காட்சியை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இரண்டாவது சீசனின்போது, பூங்கா முழுவதும் பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும். ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான ரோஜா செடிகளில் போதிய அளவில் மலர்கள் பூக்கவில்லை.
Advertisement
மலர்கள் இல்லாமல் செடிகள் பெரும்பாலும் இலைகளுடன் மட்டுமே காணப்படுகின்றன. ஒரு சில செடிகளில் மட்டும் ஆங்காங்கே மலர்கள் பூத்துள்ளன. நீண்ட தூரம் பயணம் செய்து ரோஜா மலர்களின் அழகை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள், பூக்கள் இல்லாத பூங்காவை பார்த்து ஏமாற்றமடைந்து கவலையுடன் திரும்பிச் செல்கின்றனர். இந்த ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய காலநிலை மாற்றமான ‘எல்நினோ’ தாக்கத்தால் நீலகிரி மாவட்டத்தில் பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால், ரோஜா செடிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.