உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றும், பங்கேற்றும் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த 12 போட்டியாளர்களுக்கு, மொத்தம் ரூ.49 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் வழங்கிப் பாராட்டினார். 68 நாடுகள் பங்கேற்ற 48-வது உலகத் திறன் போட்டிகள் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்றன. இதில் இந்திய அணி 6 வெள்ளிப் பதக்கங்களையும், 20 சிறப்புத் தகுதிப் பதக்கங்களையும் (Medals for Excellence) வென்று சர்வதேச அளவில் 10-வது இடத்தைப் பிடித்தது. மொத்தம் 63 திறன் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், இந்தியா சார்பில் 70 பேர் கொண்ட அணி பங்கேற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவர் வெள்ளிப் பதக்கமும், நான்கு பேர் சிறப்புத் தகுதிப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்தனர். பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை போட்டியில் Dental Prosthetics பிரிவில் பங்கேற்ற ஜா. முகமது சலாம் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதேபோல், Intelligent Security Technology பிரிவில் கா.பா. ராகுல், Mobile Applications Development பிரிவில் சு.வி. அர்ஜுன், Plastering and Drywall Systems பிரிவில் ம. சுரேந்திரன், Jewellery பிரிவில் ஜாய் தாஸ் ஆகியோர் சிறப்புத் தகுதிப் பதக்கங்களைப் பெற்றனர். இவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கியுள்ளது. அதன்படி, வெள்ளிப் பதக்கம் வென்ற ஜா. முகமது சலாமுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது. சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற நான்கு பேருக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், உலகத் திறன் போட்டிகளில் பங்கேற்ற க.மீ. சுரேஷ் குமார், கி. கோகுலகண்ணன், பூ.ர. முகமது மபாஜ், சு. அஸ்வின், த. ரோஹித், தனுஸ்ரீ மகேஷ், ஆ. மோகன்ராஜ் ஆகிய ஏழு பேருக்கும் தலா ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. இவ்வாறு மொத்தம் 12 பேருக்கு ரூ.49 லட்சத்திற்கான காசோலைகளை முதல்வர் விஜய் வழங்கி, அவர்களின் சாதனைகளைப் பாராட்டினார். இளைஞர்களின் திறன்களை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதில் தமிழக அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்தச் சாதனைகள் வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.