உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ODI-டி20 தொடர்களில் சூப்பர் சீரிஸ், எலிமினேட்டர் முறை அறிமுகம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டிகளின் அமைப்பில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரித்து, ரசிகர்களுக்கு மேலும் சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த புதிய போட்டி வடிவம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. தற்போது ஐசிசி தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷா பொறுப்பு வகிக்கும் நிலையில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஸ்காட்லாந்தின் எடின்பரோவில் நடைபெற்ற ஐசிசியின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் இந்த புதிய போட்டி அமைப்புகள் ஒப்புதல் பெற்றன. அதன் அடிப்படையில், 2027ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்த அணிகளில் தரவரிசையில் கடைசி மூன்று இடங்களில் உள்ள அணிகள், பிரதான சுற்றுக்கு முன்பாக "சூப்பர் சீரிஸ்" எனப்படும் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டும். இதில் வெற்றி பெறும் ஒரு அணி மட்டுமே பிரதான சுற்றில் இடம்பிடிக்கும். தோல்வியடையும் மற்ற இரண்டு அணிகள் தொடரிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும்.
அதன்பின் பிரதான சுற்றில் விளையாடும் 12 அணிகள் தலா ஆறு அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகளுடன், இரண்டு பிரிவுகளிலும் நான்காவது இடம் பிடித்த அணிகளில் சிறந்த செயல்திறன் கொண்ட ஒரு அணியும் சேர்த்து மொத்தம் ஏழு அணிகள் "சூப்பர் 7" சுற்றுக்கு முன்னேறும்.
இந்த "சூப்பர் 7" சுற்றில் நடைபெறும் போட்டிகளின் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இதேபோல், டி20 உலகக் கோப்பை தொடரிலும் புதிய "எலிமினேட்டர்" முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 20 அணிகள் தலா நான்கு அணிகள் கொண்ட ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் "சூப்பர் 10" சுற்றுக்கு முன்னேறும்.
அதன்பின் அந்த 10 அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மீண்டும் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பெறும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.
மீதமுள்ள இரண்டு அரையிறுதி இடங்களை நிரப்பும் வகையில், ஒவ்வொரு பிரிவிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். அந்த சுற்றில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் அரையிறுதிக்குள் முன்னேறும்.
இந்த புதிய போட்டி வடிவமைப்பு உலகக் கோப்பை தொடர்களில் போட்டித்தன்மையையும் பரபரப்பையும் மேலும் உயர்த்தும் என்ற நம்பிக்கையை ஐசிசி வெளியிட்டுள்ளது.