தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் ‘வெற்றி மடிக்கணினித் திட்டத்தை’ செயல்படுத்த ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கான நிர்வாக அனுமதியுடன் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி முக்கியமான கல்வி உபகரணமாக மாறியுள்ளது. தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவும், இணையவழிக் கல்வியைத் தொடரவும், எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெறவும் மடிக்கணினிகள் உதவுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, 2026-2027ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வெற்றி மடிக்கணினித் திட்டத்தை ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. யாரெல்லாம் பயன்பெறுவார்கள்? 2026-2027ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர். கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிலும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு (UG) மற்றும் பட்டயப்படிப்பு (Diploma) மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
Advertisement
மேலும், 2025-2026ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் மூலம் மடிக்கணினி பெறாத அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு மாணவர்களுக்கும் இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும். பொறியியல் மாணவர்களுக்கு உயர்தர மடிக்கணினிகள் பொறியியல் மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு Intel Core i5 அல்லது அதற்கு இணையான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட உயர்தர மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. திட்டத்தைக் கண்காணிக்க உயர்மட்டக் குழு வெற்றி மடிக்கணினித் திட்டத்தைத் தடையின்றி செயல்படுத்தவும், அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் முதல்-அமைச்சர் தலைமையில் உயர்மட்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட உள்ளது. மேலும், தரமான மடிக்கணினிகளைக் கொள்முதல் செய்வதை உறுதி செய்ய தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு (ELCOT) நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், மாநிலத்தின் அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உலகளாவிய போட்டிகளில் சிறந்து விளங்கவும், வேலைவாய்ப்புக்கான திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் வெற்றி மடிக்கணினித் திட்டம் முக்கியப் பங்காற்றும் என அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.