சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், சட்டம் முழு அதிகாரத்துடன் செயல்பட்டு குற்றம் செய்தவர்களுக்கும், அதில் தொடர்புடையவர்களுக்கும் விரைவாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு தெரிவித்துள்ளார். தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி, சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், 84 வயதில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையில் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரு குழந்தை அனுபவிக்கும் வேதனையை பணத்தால் ஈடுசெய்ய முடியாது என்றும், அவளது குரலை பணம் அல்லது அதிகாரத்தின் மூலம் அடக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீதியை பணம் அல்லது செல்வாக்கின் அடிப்படையில் முடிவு செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார். அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்டவர்கள் தங்களுக்கு தண்டனை கிடைக்காது என்ற எண்ணத்தை உருவாக்கும் சூழல் ஒருபோதும் இருக்கக்கூடாது என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
Advertisement
குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்றும், அவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படவோ, மவுனமாக்கப்படவோ கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவரை மவுனமாக்க அல்லது நீதியைத் தடுக்க அரசியல் செல்வாக்கு, தனிப்பட்ட தொடர்புகள் அல்லது பணம் பயன்படுத்தப்பட்டிருந்தால், அது குறித்து முழுமையாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இவ்வழக்கில் ரூ.70 கோடி பணம் தொடர்பான குற்றச்சாட்டு இருப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். வீரமணி தொடர்பான வழக்கு பல முக்கியமான கேள்விகளை எழுப்புவதாகத் தெரிவித்துள்ள குஷ்பு, “இத்தனை ஆண்டுகளாக அவர் எவ்வாறு தண்டனையின்றி தப்பித்து வந்தார்?” என கேள்வி எழுப்பியுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டனையிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இருக்கக்கூடாது என்றும், சட்டம் முழு வலிமையுடன் செயல்பட்டு குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு தாமதமின்றி தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.