மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) வெற்றியை உறுதி செய்துள்ளது. இதனால் அக்கட்சியினர் உற்சாகத்துடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெற்றி, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் நான்கு மாத கால நல்லாட்சிக்குக் கிடைத்த ஆதரவு என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க. பெற்றுள்ள வெற்றி, அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரமாகும் என்று கூறினார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியதன் வெளிப்பாடாகவே சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
Advertisement
மேலும், அ.தி.மு.க.வின் தற்போதைய நிலையை உணர்ந்து அக்கட்சியிலிருந்து பலர் விலகி வருவதாகக் கூறிய நிர்மல் குமார், அந்த வகையில் த.வெ.க.வில் இணைந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இடைத்தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் த.வெ.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். த.வெ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், வரும் காலங்களிலும் நல்லாட்சி தொடர்ந்து நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தமிழகத்திற்கு எதிரான கட்சிகள் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளதாகக் கூறிய அவர், இனிவரும் தேர்தல்களிலும் த.வெ.க. வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்றும், மக்களின் விருப்பத்திற்கேற்ப த.வெ.க. அரசு செயல்படும் என்றும் தெரிவித்தார்.