திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 22 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் தாராபுரத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார். தற்போது 2-வது முறையாக இன்று ‘ரோடு ஷோ’ மூலம் அவர் வாக்கு சேகரிக்க உள்ளார். தாராபுரத்தில் இருந்து மூலனூர் வரை சுமார் 40 கிலோமீட்டர் தூரம் இந்த ‘ரோடு ஷோ’ நடைபெற உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணியளவில் தாராபுரம் மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தை சென்றடைகிறார்.
Advertisement
பின்னர் பிரசார வேனில் சுமார் 2 கிலோமீட்டர் பயணம் செய்து உடுமலை ரவுண்டானா சந்திப்புக்கு செல்கிறார். தொடர்ந்து பெரியார் சிலை சந்திப்பு, 5 சாலைகள் சந்திப்பு, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் ‘ரோடு ஷோ’ மேற்கொள்கிறார். இதையடுத்து குளத்துப்பாளையம், கரையூர், மூலனூர், வஞ்சியம்மன் கோவில் பகுதிகளிலும் அவர் ‘ரோடு ஷோ’ மூலம் பிரசாரம் செய்கிறார். பின்னர் அதே வழியாக மீண்டும் மாருதி நகர் சென்றடையும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்கிறார். பின்னர் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். முதல்-அமைச்சர் விஜய்யின் ‘ரோடு ஷோ’வை முன்னிட்டு அவர் பயணிக்கும் வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று பிரசாரத்தை பார்வையிடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, தாராபுரம் மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தை கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் உடனிருந்தனர்.