ஆயுத பூஜை எதிரொலி: ஆம்னி பஸ் கட்டணம் அதிரடி உயர்வு
பண்டிகை காலங்களில் அதிகரிக்கும் பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாட்களிலும் ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆம்னி பஸ்களுக்கான கட்டணத்தை அரசு நேரடியாக நிர்ணயிக்க முடியாத நிலையில், விடுமுறை காலங்களில் சில பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகள் அடுத்த மாதம் 19-ந்தேதி திங்கட்கிழமையும், 20-ந்தேதி செவ்வாய்க்கிழமையும் வருவதுடன், சனி, ஞாயிறு விடுமுறையும் இணைந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, 16 மற்றும் 17-ந்தேதிகளில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். பல்வேறு தனியார் ஆம்னி பஸ்களின் இணையதளங்களில் இந்த நாட்களுக்கான கட்டணங்கள் வழக்கத்தைவிட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. கொடைக்கானலுக்கு ரூ.4,999, ஊட்டிக்கு ரூ.3,500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு ரூ.3,000-க்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வழக்கமான நாட்களில் இந்த நகரங்களுக்கு செல்ல சுமார் ரூ.2,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல், மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவும் பெரும்பாலான ஆம்னி பஸ்களில் ரூ.3,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.