ஆயுத பூஜை எதிரொலி: ஆம்னி பஸ் கட்டணம் அதிரடி உயர்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆயுத பூஜை எதிரொலி: ஆம்னி பஸ் கட்டணம் அதிரடி உயர்வு

ஆயுத பூஜை எதிரொலி: ஆம்னி பஸ் கட்டணம் அதிரடி உயர்வு

பண்டிகை காலங்களில் அதிகரிக்கும் பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாட்களிலும் ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆம்னி பஸ்களுக்கான கட்டணத்தை அரசு நேரடியாக நிர்ணயிக்க முடியாத நிலையில், விடுமுறை காலங்களில் சில பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகள் அடுத்த மாதம் 19-ந்தேதி திங்கட்கிழமையும், 20-ந்தேதி செவ்வாய்க்கிழமையும் வருவதுடன், சனி, ஞாயிறு விடுமுறையும் இணைந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, 16 மற்றும் 17-ந்தேதிகளில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். பல்வேறு தனியார் ஆம்னி பஸ்களின் இணையதளங்களில் இந்த நாட்களுக்கான கட்டணங்கள் வழக்கத்தைவிட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. கொடைக்கானலுக்கு ரூ.4,999, ஊட்டிக்கு ரூ.3,500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு ரூ.3,000-க்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வழக்கமான நாட்களில் இந்த நகரங்களுக்கு செல்ல சுமார் ரூ.2,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல், மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவும் பெரும்பாலான ஆம்னி பஸ்களில் ரூ.3,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் பயணிகளுக்காக 20 மற்றும் 21-ந்தேதிகளிலும் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமான நாட்களில் தென் மாவட்டங்களுக்கு செல்ல ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை இருக்கும் கட்டணம் தற்போது ரூ.3,500-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் அதிக கட்டணம் காரணமாக சிலர் பயணத்தை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பயண நெரிசல் மற்றும் கடைசி நேர கட்டண உயர்வை தவிர்க்கும் வகையில், சிலர் 20 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முயன்றுள்ளனர். இருப்பினும், குறிப்பிட்ட விடுமுறை நாட்களில் மட்டும் கட்டணம் அதிகமாக இருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயுத பூஜைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் கட்டணம் குறைவாக இருக்கும் நிலையில், குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறுகையில், ஆம்னி பஸ்களில் அதிகபட்சமாக வசூலிக்க வேண்டிய கட்டணம் 2024-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். அந்த அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், சிலர் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாக வசூலிப்பதால் அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். மேலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.