அரியானா: கழிவறையில் பதுங்கியிருந்த 6 அடி நீள நாகப்பாம்பு - வனத்துறையினர் மீட்பு
குருகிராம்: அரியானா மாநிலம் குருகிராமில், வீட்டின் கழிவறை கோப்பைக்குள் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள விஷ நாகப்பாம்பு, வனவிலங்கு பாதுகாப்பு குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.குருகிராம் அருகே உள்ள காடோலி கலான் கிராமத்தில் ஒரு வீட்டின் கழிவறையில் இருந்து தொடர்ந்து பாம்பு சீறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர்கள், உடனடியாக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் கிடைத்ததும், வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர் அனில் காந்தாஸ் தலைமையிலான மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கழிவறையை ஆய்வு செய்தபோது, கழிவறை கோப்பையின் உட்புறத்தில் இருந்த குறுகிய இடைவெளிக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள கண்ணாடி நாகப்பாம்பு சிக்கியிருந்தது தெரியவந்தது.பாம்பை நேரடியாக வெளியே எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், மீட்புக் குழுவினர் கழிவறை இருக்கையை மிகுந்த எச்சரிக்கையுடன் உடைத்து பாம்பை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.