அமெரிக்காவை வியக்க வைத்த இந்திய தேர்தல் நடைமுறை... டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு பதிவு
இந்தியாவின் தேர்தல் நடைமுறை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் தேர்தல் முறையிலும் மாற்றம் தேவைப்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் அவரது பதிவு அமைந்துள்ளது.டிரம்ப் தனது பதிவில், இந்த மாத தொடக்கத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் தன்னுடன் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். அப்போது, அமெரிக்காவின் அரசு நிர்வாக நடைமுறைகள் குறித்து ஞானேஷ் குமார் கேட்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் முறையான புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் தேர்தலை எவ்வாறு நடத்துகிறீர்கள் என்றும் ஞானேஷ் குமார் தன்னிடம் கேட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.இந்தியாவில் நடைபெற்ற கடந்த தேர்தலில் 64.60 கோடி வாக்காளர்கள் வாக்களித்ததாகவும், அவர்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தபால் வாக்குகளைப் பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு வாக்காளரும் முறையான புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக, அமெரிக்க தேர்தல் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ‘அமெரிக்காவை பாதுகாப்போம்’ என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.அமெரிக்க தேர்தல்களில் முடிவெடுக்கும் உரிமை அந்நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகையும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சட்டமசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், வாக்காளர்கள் தாங்கள் அமெரிக்க குடிமக்கள் என்பதையும், தங்களது அடையாளத்தையும் உறுதிப்படுத்தும் முறையான அடையாள அட்டையை தேர்தலின்போது கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.மற்ற நாடுகளின் தேர்தல்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்துள்ளன.