அமெரிக்காவில் படித்து அங்கேயே வேலை செய்ய ரூ.1 கோடி கட்டணமா? டிரம்ப் நிர்வாகம் புதிய திட்டம் பரிசீலனை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு வரி மற்றும் குடியேற்றக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாற்றங்களை முன்னெடுத்து வருகிறார். அந்த வரிசையில், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்த பின்னரும் அந்நாட்டிலேயே வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு மாணவர்களிடம் 1 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.95 லட்சம்) கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தக் கட்டணம், பட்டப்படிப்பை முடித்த வெளிநாட்டு மாணவர்கள் தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெயினிங் (OPT)*திட்டத்துடன் இணைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவர்கள் 1 முதல் 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் வேலை செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.இதற்கு முன்பு, எச்-1பி (H-1B) விசாவுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்க டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இதையடுத்து, அதே அளவிலான கட்டணத்தை வேறு திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்த முடியுமா என்பது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் உயர்கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கூடுதல் நிதிச் சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகலாம். மேலும், வெளிநாட்டு மாணவர் சேர்க்கையை அதிகம் நம்பியுள்ள அமெரிக்க பல்கலைக்கழகங்களின் சேர்க்கை எண்ணிக்கையிலும் இதன் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.எனினும், இந்தக் கட்டணத்தை அமல்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.