‘அமெரிக்கா உடனான எரிசக்தி ஒப்பந்தம் 25 ஆண்டுகள் நீடிக்கும்’ - வெனிசுலா அதிபர்
வெனிசுலாவுடன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, வெனிசுலாவில் உறுதி செய்யப்பட்டுள்ள 6,500 கோடி பீப்பாய் எண்ணெய் இருப்புகளில் பெரும்பகுதி மீது அமெரிக்காவுக்கு கட்டுப்பாடு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ, பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, வெனிசுலாவில் உள்ள 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்தும் திட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வெனிசுலாவின் எண்ணெய் துறையில் சுமார் 10,000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.