முன்னாள் குடியரசுத் தலைவரும், புகழ்பெற்ற ஏவுகணை விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தி முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றியதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க ஊக்கமளித்தவர் அப்துல் கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக அவர் செய்த அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், குடியரசுத் தலைவர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தபோதும், ஆசிரியர் என்ற அடையாளத்தையே பெருமையாகக் கருதியவர் அப்துல் கலாம்.
Advertisement
தனது இறுதிக்காலம் வரை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த அவரது எளிமை, நேர்மை மற்றும் அறிவியல் சிந்தனை ஆகியவை என்றும் மதிக்கத்தக்கவை என்றும் முதல்வர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், அப்துல் கலாமின் உயர்ந்த சிந்தனைகளையும் தொலைநோக்குப் பார்வையையும் மனதில் கொண்டு, வளமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.