பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், “அண்ணா” என்ற மூன்றெழுத்து தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாநிலக் கட்சிகளாலும் ஆட்சியை அமைத்து ஜனநாயகத்தை விரிவுபடுத்த முடியும் என்பதை இந்திய அரசியலுக்கு அண்ணா எடுத்துக்காட்டியதாகவும், கூட்டாட்சி தத்துவமே இந்தியாவின் அடையாளம் என்பதை வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சாதாரண மக்களும் ஆட்சிப் பொறுப்புக்கு வர முடியும் என்ற ஜனநாயக மாற்றத்தை அண்ணா உருவாக்கியதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். தந்தை பெரியார் வலியுறுத்திய சமத்துவக் கொள்கைகளைத் தேர்தல் அரசியலில் முன்னெடுத்ததுடன், சமூகநீதியை அரசு திட்டங்கள் மூலம் செயல்படுத்தினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
‘மாநில சுயாட்சி’ என்ற அரசியல் கொள்கையின் மூலம் தமிழ்நாடு தனது தனித்துவத்துடன் தலைநிமிர்ந்து நிற்க வழிவகுத்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்ணாவின் “மக்களிடம் செல்”, “உன்னால் முடியும் தம்பி”, “அரசியல் ஆர்வம் குன்றிடும் நாளே ஜனநாயக முறை அழிந்திடும் நாள்” போன்ற கருத்துகள் தன்னை தேர்தல் அரசியல் நோக்கி சிந்திக்கத் தூண்டியதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அரசியல் அறிவியல் மாணவராக இருந்த தனக்கு, பேரறிஞர் அண்ணாவே மூத்த ஆசிரியராகவும் எப்போதும் வழிகாட்டியாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி அர்ப்பணிப்புடன் செயல்படுவதோடு, அவர் கண்ட மாபெரும் கனவுகளை மீண்டும் உருவாக்குவோம் என அவரது பிறந்தநாளில் உறுதியேற்போம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.