வயநாடு நிலச்சரிவு பேரிடர்: 2 ஆண்டுகள் நிறைவு; உயிரிழந்தோருக்கு கண்ணீருடன் அஞ்சலி
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பேரழிவான நிலச்சரிவுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் கல்லறைகளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.கடந்த 2024 ஜூலை 30-ஆம் தேதி வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை, புதுமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கத்தால் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவு நேரத்தில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மலைப்பாறைகளும் கற்களும் சரிந்து விழுந்ததால், பல கிராமங்கள் முற்றிலும் அழிந்து அடையாளமே தெரியாத நிலை ஏற்பட்டது.இந்த பேரிடரில் 298 பேர் உயிரிழந்தனர். மேலும் 410 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளானன. 37 பேரை தொடர்ந்து கண்டுபிடிக்க முடியாததால், அவர்களை உயிரிழந்தவர்களாக கேரள அரசு பின்னர் அறிவித்தது. இதன் மூலம் இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 335 ஆக உயர்ந்தது.பேரிடரில் உயிர் தப்பியவர்களின் மறுவாழ்வுக்காக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதன் முதல் கட்டமாக 178 பேருக்கு புதிய வீடுகள் கட்டி வழங்கப்பட்டன.
இரண்டாம் கட்டத்தில் மேலும் 157 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இந்த பேரிடருக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி, கல்லறைகளில் மலர்கள் சமர்ப்பித்தனர். நிகழ்ச்சியின்போது மழை பெய்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மரியாதை செலுத்தினர்.தாயை இழந்த மகன்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், தந்தையை இழந்த குடும்பத்தினர், உறவினர்களை இழந்தவர்கள், மாணவர்களை இழந்த ஆசிரியர்கள், வாழ்க்கைத்துணையை இழந்த கணவன், மனைவி என பலர் மவுனமாக நின்றதங்களின்வேதனையைநினைவுகூர்ந்தனர்.நினைவேந்தல் நிகழ்வில் வருவாய்த் துறை அமைச்சர் அனில் குமார், வேளாண்துறை அமைச்சர் சித்திக் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கல்லறைகளில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற சர்வமத பிரார்த்தனையிலும் அவர்கள் பங்கேற்றனர்.