இன்று கடைசி நாள்: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் எவ்வளவு அபராதம்?
மாத ஊதியம் பெறுபவர்கள் உள்ளிட்ட தகுதியுள்ள வரி செலுத்துநர்கள், 2025-26 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று (ஜூலை 31) கடைசி நாளாகும். ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 படிவங்களை பயன்படுத்தும் தனிநபர்கள், சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் வரி தணிக்கை தேவையில்லாதவர்கள் இன்று நள்ளிரவு 12 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், கடைசி நேரத்தில் அதிகமானோர் இணையதளத்தை பயன்படுத்தினாலும், ஐடிஆர் தளம் செயலிழக்காது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததன்படி, இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும், இன்று கடைசி நாள் என்பதால் மேலும் லட்சக்கணக்கான சம்பளதாரர்கள் ஒரே நேரத்தில் தாக்கல் செய்ய முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்றைய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்ய முடியாதவர்கள், டிசம்பர் 31 வரை Belated Return முறையின் மூலம் கணக்கை சமர்ப்பிக்கலாம். ஆனால் இதற்காக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும்.வணிகம் அல்லது தொழில் வருமானம் பெறுபவர்கள் மற்றும் வரி தணிக்கை தேவையில்லாதவர்கள் ஐடிஆர்-3 அல்லது ஐடிஆர்-4 படிவங்களை ஆகஸ்ட் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும். கணக்கு தணிக்கை கட்டாயமாக உள்ள வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு அக்டோபர் 31 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துநர்கள் பழைய வரி முறை அல்லது புதிய வரி முறை ஆகிய இரண்டில் தங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து கணக்கை தாக்கல் செய்யலாம். புதிய வரி முறையில் சில வரிச்சலுகைகள் கிடைக்காத நிலையில், அதிக வருமான வரி உச்சவரம்பு உள்ளது. அதே நேரத்தில், பழைய வரி முறையில் பல்வேறு முதலீடுகள் மூலம் வரிச்சேமிப்பு பெறும் வாய்ப்பு உள்ளது. எனவே, தங்களது நிதிநிலைக்கு ஏற்ற முறையை தேர்வு செய்து தாக்கல் செய்வது முக்கியம்.மேலும், வருமான வரி கணக்கை சமர்ப்பித்த பிறகு e-Verification செய்வது அவசியம். இந்த செயல்முறை நிறைவடைந்த பின்னரே, கணக்கு தாக்கல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும்.