மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - நேர்முகத்தேர்வு எப்போது? டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நியமன நடவடிக்கையில் நீடித்து வந்த தடை நீங்கியுள்ள நிலையில், நேர்முகத் தேர்வுக்கான தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.மோட்டார் வாகன ஆய்வாளர் பதவியில் காலியாக இருந்த 110 இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக விண்ணப்பித்த 2,176 பேரில் 785 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தகுதி பெற்றவர்களுக்கு 2018-ம் ஆண்டு ஜூன் 10-ந் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.தேர்வு விதிகளின்படி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1:2 என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்களை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வேண்டும்.
ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்காமல் 33 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டிலும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நியமன நடவடிக்கைகள் சுமார் 8 ஆண்டுகளாக தடைபட்டிருந்தன.தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால், நேர்முகத் தேர்வை நடத்த டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை எடுத்துள்ளது. செப்டம்பர் 1 முதல் 3-ந் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க தகுதி பெற்றவர்களின் பட்டியலும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.