முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாள்: மாணிக்கம் தாகூர் புகழஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளையொட்டி, அவரது தேசப் பணிகளை நினைவுகூர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 21-ஆம் நூற்றாண்டின் நவீன இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக ராஜீவ் காந்தி திகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.இந்தியா தனது பழமையான பெருமையை தக்கவைத்துக்கொண்டு, இளம் தேசமாக புதிய பாதையில் முன்னேறி உலகை வழிநடத்த வேண்டும் என்ற கனவை ராஜீவ் காந்தி கொண்டிருந்ததாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அந்தக் கனவை வெறும் கருத்தாக முன்வைக்காமல், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் செயல்படுத்தியவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ராஜீவ் காந்தி அடித்தளமிட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இன்றைய டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், ஜனநாயகத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பஞ்சாயத்து ராஜ் சட்டம், இளைஞர்கள் அரசியல் செயல்பாட்டில் பங்கேற்கும் வகையில் 18 வயதில் வாக்களிக்கும் உரிமை, கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த நவோதயா பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ராஜீவ் காந்தி கொண்டுவந்ததாகவும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.அமைதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உலக அரங்கில் உறுதியுடன் குரல் கொடுத்த உயர்ந்த மனிதராக ராஜீவ் காந்தியை நெல்சன் மண்டேலா குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், தேசத்தின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் நவீன வளர்ச்சிக்காக ராஜீவ் காந்தி செய்த தியாகமும் அவரது சிந்தனைகளும் தொடர்ந்து வழிகாட்டும் என தெரிவித்துள்ளார்.