முதல்-அமைச்சர் அலுவலகம் ஏன் மாற்றப்படுகிறது? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்
சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலக கட்டிடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த முதல்-அமைச்சர் அலுவலகம், நிர்வாக வசதிகளை கருத்தில் கொண்டு நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதல்-அமைச்சருக்கான புதிய அறை, தனிச் செயலர்களுக்கான அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்காக ரூ.5.54 கோடி மதிப்பில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை டெண்டர் கோரியிருந்தது.இந்த டெண்டரில் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:“டெண்டர் நடைமுறை இன்னும் நிறைவடையவில்லை. பொதுவாக கட்டுமானப் பணிகளுக்கான டெண்டரில், மதிப்பீட்டுத் தொகையை விட 3 முதல் 7 சதவிகிதம் வரை கூடுதலாக தொகை நிர்ணயிக்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டின் மதிப்பீட்டுத் தொகையையே அடிப்படையாகக் கொண்டுள்ளோம்.பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற டெண்டர் நடவடிக்கைகள் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
கடந்த 60 நாட்களில் மட்டும் 20 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கோரப்பட்டுள்ளன. தற்போது சுமார் 25 முதல் 30 சதவிகிதம் குறைவான தொகையில் டெண்டர்கள் கிடைத்து வருகின்றன.புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கும் இருந்தது. இதில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து உள்ளது.முதல்-அமைச்சர் தினமும் காலையிலிருந்து மாலை வரை அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார். அவர்களை சந்திப்பதற்கு ஏற்ற வகையில் வசதிகளை ஏற்படுத்துவதற்காகவே அலுவலகம் மாற்றப்படுகிறது.முதல்-அமைச்சரின் தனிச் செயலர்கள் தற்போது 100 சதுர அடி கூட இல்லாத சிறிய அறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு முறையான கழிப்பறை வசதியும் இல்லை. எனவே, அவர்களுக்கான அலுவலகங்களும் மாற்றப்படுகின்றன.பிரசார காலத்தில் சாதாரண உணவகங்களில் கிடைக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, பிரசார வாகனத்திலேயே இரண்டு மணி நேரம் ஓய்வெடுக்கும் அளவுக்கு எளிமையாக செயல்படும் முதல்-அமைச்சர் குறித்து தவறான தகவல்களை அவையில் தெரிவிக்க வேண்டாம்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.