முகத்தில் ஆயிரக்கணக்கான தேனீக்களுடன் 5 மணி நேரம்: நெல்லை வாலிபர் புதிய சாதனை
நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த 27 வயதான இசக்கிமுத்து என்ற முருகன், தனது முகம் மற்றும் தலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான தேனீக்களை 5 மணி நேரத்துக்கும் மேலாக அமரவைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இவரது முயற்சி ‘சீனா உலக சாதனைப் புத்தகம்’ மற்றும் ‘சோழன் உலக சாதனைப் புத்தகம்’ ஆகியவற்றில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.வேளாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த படிப்பை முடித்துள்ள முருகன், படிப்புக்குப் பிறகு வேறு வேலைக்குச் செல்லாமல் முழுநேரமாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். தற்போது 18-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட தேன் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருவதுடன், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக தேனீ வளர்ப்பு பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.தேனீக்கள் மனிதர்களுக்கும் விவசாயத்துக்கும் எவ்வளவு முக்கியமானவை என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் நோக்கில், வித்தியாசமான சாதனை முயற்சியை மேற்கொள்ள முருகன் திட்டமிட்டார். இதற்காக நெல்லை மாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில், முருகன் தனது முகம் மற்றும் தலை முழுவதும் ஆயிரக்கணக்கான இந்திய தேனீக்களை மொய்க்கச் செய்தார். கண்கள், மூக்கு, வாய் உள்ளிட்ட பகுதிகள் தெரியாத அளவுக்கு தேனீக்கள் அவரது முகத்தை முழுமையாக சூழ்ந்தன.தேனீக் கொட்டினால் கடுமையான வலி ஏற்படுவதுடன், உயிருக்கு ஆபத்தும் ஏற்படக்கூடிய சூழலில், முருகன் எந்தவித பதற்றமும் இன்றி அசையாமல் அமர்ந்திருந்தார்.
தொடர்ந்து 5 மணி நேரம் 3 நிமிடங்கள் தேனீக்களை முகத்தில் அமரவைத்த அவர், இதன் மூலம் புதிய சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் வைத்திருந்த சாதனையை முருகன் முறியடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முருகனின் இந்த சாதனை முயற்சி ‘சீனா உலக சாதனைப் புத்தகம்’ மற்றும் ‘சோழன் உலக சாதனைப் புத்தகம்’ ஆகியவற்றில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன.இதுகுறித்து முருகன் கூறுகையில், தேனீக்கள் மனிதர்களுக்கு எதிரிகள் அல்ல என்றும், அவை நம் நண்பர்கள் என்றும் தெரிவித்தார். தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கு சிறந்த சுயதொழில் வாய்ப்பாக இருக்கும் என்பதை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த ஆபத்தான முயற்சியை மேற்கொண்டதாக அவர் கூறினார். மேலும், உரிய பயிற்சி இல்லாமல் இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.முகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தேனீக்களுடன் முருகன் அமைதியாக அமர்ந்திருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.