மாற்றமும் மக்கள் பணியும் தொடரும்; 100 நாட்கள் பணிச் சாதனையை பகிர்ந்த தவெக எம்.எல்.ஏ கனிமொழி
கவுண்டம்பாளையம் தொகுதியில் முன்னெடுக்கப்பட்ட மாற்றங்களும், மக்களுக்கான சேவைகளும் தொடர்ந்து வலுப்பெறும் என்று அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றதிலிருந்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையிலான ஆட்சியை வழங்கி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி சந்தோஷ், முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் வாழ்த்துகளுடனும், பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்தின் வழிகாட்டுதலுடனும், கவுண்டம்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தனது பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.கடந்த 100 நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை நேரில் சந்தித்து, 1,317 கோரிக்கை மனுக்களைப் பெற்றதாகவும், மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பெறப்பட்ட மனுக்களில் 953 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், 323 இடங்களில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு, மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த 100 நாள் பயணம் வெறும் புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல என்றும், தொகுதி மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் தீர்வுகளையும் வழங்கிய மக்கள் பணிக்கான சான்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தன்னை வெற்றி பெறச் செய்த ஒவ்வொரு குடும்பத்தின் நம்பிக்கையையும் காப்பது தனது கடமை என்றும், மக்கள் பிரதிநிதியாக மட்டுமல்லாமல், வீட்டுப் பிள்ளையாகவும் மக்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவதே தனது இலக்கு என்றும் கனிமொழி சந்தோஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், கவுண்டம்பாளையத்தில் தொடங்கிய மாற்றப் பயணமும், மக்களுக்கான சேவையும் இனி மேலும் உறுதியுடன் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.