முதல் டி20: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்குமான முதல் டி20 போட்டி இன்று தம்புலா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஷாவல் சபிகியூர் 63 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரராகத் திகழ்ந்தார். இலங்கை அணியின் கவிஷா சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.
இதன் மூலம் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.இலங்கை அணியின் வெற்றிக்கு தொடக்க வீராங்கனை இமிஷா துலானி முக்கிய காரணமாக அமைந்தார். அவர் 64 பந்துகளில் அபாரமாக ஆடி, சதம் விளாசி ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்தார்.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.