பெரம்பூரில் முதல்-அமைச்சர் விஜய் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
பெரம்பூர் தொகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி, முதல்-அமைச்சர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக முதல்-அமைச்சர் விஜய் உள்ளார். சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் அவரது தொகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தொகுதி மக்களின் குறைகளை நேரடியாகப் பெறுவதற்காக ‘மக்கள் சேவை தளம்’ என்ற செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை எந்த நேரத்திலும் பதிவு செய்ய முடியும். இந்த செயலியை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.மேலும், எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தனியாக கணினிகள் அமைக்கப்பட்டு, 10 பணியாளர்கள் தினந்தோறும் பொதுமக்களிடம் இருந்து குறைகளைப் பெற்று அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், கொடுங்கையூர் வேதாந்தா முருகப்பா தெருவில் சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், அந்த பகுதியில் சாலையிலேயே கழிவுநீர் செல்வதாகவும், தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது என அதிகாரிகள் கூறி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.மேலும், தவெக ஆட்சிக்கு வந்தால் தங்களது பகுதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆட்சி அமைந்த பிறகு இதுதொடர்பாக பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தவெக நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வந்தனர். அவர்களிடம் பெண்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக நிர்வாகிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.