பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 27-ந் தேதி சிறப்பு ரெயில்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 27-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டும், பயணிகளின் வசதிக்காகவும் தெற்கு ரெயில்வே சார்பில் விழுப்புரம்–திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.அதன்படி, 27-ந் தேதி காலை 10.10 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130), காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை சென்றடையும்.மறுமார்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129), மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடையும்.இந்த இரு சிறப்பு ரெயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.இந்த விவரங்களை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.