சென்னையை வளர்த்தெடுத்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்: மு.க.ஸ்டாலின்
சென்னையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு வந்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அனைவரையும் அரவணைத்து வாழ்வளிக்கும் சென்னைக்கு 387 வயது நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.101 அடி உயர பாலத்தில் இருந்து பார்த்தாலும், விமானத்தில் இருந்து நகரை கவனித்தாலும், தரைப்பகுதியில் நின்று பார்த்தாலும், சாலைகளுக்கு கீழே அமைந்துள்ள வடிகால் கட்டமைப்புகளை பார்த்தாலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. ஆட்சியின் திட்டங்களையும் சாதனைகளையும் காண முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ ரெயில், ஐ.டி.
பூங்கா, பின்டெக் டவர், உயரமான மருத்துவமனைகள் மற்றும் நூலகக் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் சென்னையின் வளர்ச்சி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சியின் மேயர், துணை முதல்-அமைச்சர், முதல்-அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து சென்னையின் வளர்ச்சிக்கு பங்களித்ததில் பெருமிதம் கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், அன்பும் சிறப்பும் நிறைந்த சென்னை தொடர்ந்து வளர வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.