சர்க்கரை விலை உயர்வுக்கும் எத்தனாலுக்கும் தொடர்பு இல்லை; மத்திய அரசு விளக்கம்
நாடு முழுவதும் சர்க்கரை விலை சமீப காலமாக உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்புக்காக சர்க்கரையை அரசு அதிக அளவில் பயன்படுத்துவதால், சந்தையில் சர்க்கரை கிடைப்பது குறைந்து விலை அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த காரணத்தை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.இதுகுறித்து மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியதாவது: சமீபத்திய சர்க்கரை விலை உயர்வுக்கு, எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை திசை திருப்பப்படுவதை காரணமாகக் கூறுவது சரியல்ல. கரும்பில் ஏற்பட்டுள்ள சிவப்பு அழுகல், நுனி துளைப்பான் பாதிப்பு மற்றும் மழை வெள்ளம் ஆகியவற்றால் சர்க்கரை உற்பத்தி குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.மேலும், சர்க்கரை விலையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
அக்டோபர் 31-ந் தேதிக்குள் 10 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மொத்த நுகர்வோர் மற்றும் டீலர்களுக்கான சர்க்கரை கையிருப்பில் வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த நடவடிக்கைகளின் மூலம் வரும் நாட்களில் சில்லறை சர்க்கரை விலை குறையும் என எதிர்பார்ப்பதாகவும் சஞ்சீவ் சோப்ரா கூறினார்.அதேநேரத்தில், தற்போதைய விலை உயர்வுக்கு சர்க்கரை ஆலை உரிமையாளர்களே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். வெறும் 7 நாட்களில் சர்க்கரையின் விலையை ஒரு கிலோ ரூ.47-48 என்ற அளவில் இருந்து ரூ.62 ஆக ஆலை உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதாகவும், இது எந்த வகையிலும் நியாயமானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.