சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்ட 2 பேர் கைது; சிறுவனும் சிக்கினார்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கூர்மையான ஆயுதங்களுடன் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 18 வயது இளைஞர் மற்றும் 16 வயது சிறுவர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.காயல்பட்டினம் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேல்முருகனின் மகன் மதன் (18) மற்றும் அவரது 16 வயது நண்பர் இணைந்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கையில் ஏந்தியபடி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோக்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, காயல்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்தார். பின்னர், இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் தலைமையிலான போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு மதன் மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.