காவிரி விவகாரம்: தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசின் அணுகுமுறையை கண்டித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட பின்னரும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாமல் இருப்பது தமிழர்களுக்கு எதிரான செயலாக மட்டுமல்லாமல், ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவையும் மதிக்காத போக்காக இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடுமையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.கர்நாடக அரசின் இந்த பிடிவாதமான நிலைப்பாடு தொடருமானால், தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு, நிலைமை மிகவும் மோசமடையும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) தலைவர் வினீத் குப்தா தெரிவித்த தகவலின்படி, கர்நாடகா இதுவரை தமிழகத்திற்கு திறந்துவிட்ட மொத்த நீரின் அளவு ஒரு டி.எம்.சி. அடியைக்கூட எட்டவில்லை என்று திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, பிலிகுண்டுலுவில் ஜூலை 27-ஆம் தேதி வரை 27.2 டி.எம்.சி. அடி நீர் கிடைத்திருக்க வேண்டிய நிலையில், வெறும் 0.6 டி.எம்.சி.
அடி மட்டுமே வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 1 முதல் ஏற்பட்ட மொத்த பற்றாக்குறை சுமார் 33 டி.எம்.சி. அடியாக உள்ளதாகவும், நிர்ணயிக்கப்பட்ட 36.4 டி.எம்.சி. அடியுடன் ஒப்பிடும்போது ஜூன் 1 முதல் ஜூலை 27 வரை கிடைத்த நீர் வெறும் 3.6 டி.எம்.சி. அடி மட்டுமே, அதாவது சுமார் 10 சதவீதம் தான் எனவும் தெரிவித்துள்ளார்.தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3,500 கியூசெக் நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த நீரையும் வழங்கக்கூடாது என கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.இந்த சூழலில் குறுவை சாகுபடி ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களின் ஒட்டுமொத்த விவசாயமும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இனி கர்நாடக அரசு தன்னிச்சையாக தமிழகத்திற்கு நியாயமான நீரை வழங்கும் என்ற நம்பிக்கைக்கு இடமில்லை என்றும், தமிழகத்தின் உரிமைக் கோரிக்கையை வலுவாக வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, காவிரி விவகாரத்தில் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.