கோவையில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த கிராம மக்கள்
கோவை மாவட்டத்தில் உள்ள லக்கிபாளையம் கிராமம் கடந்த ஆறு மாதங்களாக மழையின்றி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில், கழுதைகளுக்கு திருமணம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பெண் கழுதைக்கு புடவை, வளையல் மற்றும் மாலை அணிவிக்கப்பட்டது. அதேபோல், ஆண் கழுதைக்கு வேட்டி மற்றும் துண்டு அணிவித்து மணமகன் போல் அலங்கரிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, லக்கிபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், மேளதாளங்கள் முழங்க பெண் கழுதைக்கு தாலி கட்டி திருமணச் சடங்கு நடைபெற்றது.திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கம்பங்கூழ் வழங்கப்பட்டது.
இந்தச் சடங்குக்குப் பிறகு மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.கழுதைகளுக்கு திருமணம் நடத்தினால் மழை பெய்யும் என்பது பழமையான நம்பிக்கை என கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் மழை பெய்ததாகவும் அவர்கள் கூறினர்.