குஜராத்தில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள நிலையில், பாவ்நகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
பாவ்நகர் மாவட்டம் காராகடி கிராமத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் 5 நண்பர்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்த மாவட்ட அதிகாரிகள் 5 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரசாயனம் கலந்த நச்சுத்தன்மை கொண்ட மதுவை அருந்தியதால் தற்செயலாக மரணம் ஏற்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக அருகிலுள்ள கிராமங்களிலும் கள்ளச்சாராயம் குடித்த பலர் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரபல மதுபான நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பாட்டில்களில் கள்ளச்சாராயம் நிரப்பி விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், அந்த பாட்டில்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.கள்ளச்சாராயம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு தயாரிக்கப்பட்டது, பாவ்நகருக்கு யார் அனுப்பியது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 21 மதுபான வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.