இந்தியாவில் பள்ளிக் கல்வி தரத்தில் முதல் 10 இடங்கள்: தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்
இந்தியாவில் பள்ளிக் கல்வியின் வளர்ச்சி மற்றும் தரத்தை அடிப்படையாகக் கொண்டு 2025-2026-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் பள்ளிக் கல்வியின் வளர்ச்சி நிலை குறித்து ஆண்டுதோறும் மதிப்பீடு செய்யப்பட்டு தரவரிசை வெளியிடப்படுகிறது. பள்ளிக் கல்வி வளர்ச்சி குறியீட்டில் அணுகல், பங்களிப்பு, மாணவர் தக்கவைப்பு, கல்வித் தரம் மற்றும் உள்கட்டமைப்பு என 5 முக்கிய அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.இதன் அடிப்படையில் பள்ளிகளின் கிடைப்புத்தன்மை, மாணவர் சேர்க்கை மற்றும் சமத்துவம், மாணவர்களை தொடர்ந்து கல்வியில் தக்கவைப்பது, கற்றல் முடிவுகள் மற்றும் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மதிப்பிடப்படுகின்றன.2025-2026-ம் ஆண்டுக்கான தரவரிசையில் சண்டிகர் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
கேரளா 2-வது இடத்திலும், புதுச்சேரி 3-வது இடத்திலும், கோவா 4-வது இடத்திலும் உள்ளன. தலைநகர் டெல்லி 5-வது இடத்தையும், பஞ்சாப் 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. முந்தைய மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் மதிப்பெண் 0.018 அதிகரித்திருந்தாலும், தரவரிசையில் 7-வது இடத்தையே தக்க வைத்துள்ளது.முதல் 10 இடங்களில் அந்தமான் நிகோபார் தீவுகள் 8-வது இடத்திலும், லட்சத்தீவு 9-வது இடத்திலும், அரியானா 10-வது இடத்திலும் உள்ளன. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்தப் பட்டியலில் 10-வது இடத்துக்கு பின்னர் இடம்பெற்றுள்ளன.