ஆகஸ்ட் 12-ல் அரிய முழு சூரிய கிரகணம்; இந்தியாவில் இருந்து நேரடியாக பார்க்க முடியுமா?
சூரியன் மற்றும் பூமி இடையே நிலவு வந்து, அதன் நிழல் பூமியின் மீது முழுமையாகப் படும் வானியல் நிகழ்வே முழு சூரிய கிரகணம் எனப்படுகிறது. அந்த வகையில், வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி அரிய முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த நிகழ்வை நேரலையாக ஒளிபரப்ப இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா அறிவித்துள்ளது.
பொதுமக்கள் இந்த அரிய வானியல் நிகழ்வை காணும் வகையில், நாசா தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் நேரலை ஒளிபரப்பை ஏற்பாடு செய்துள்ளது.இந்த முழு சூரிய கிரகணத்தை கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகள், போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் ரஷியாவின் வடக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் முழுமையாகக் காண முடியும்.
மேலும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இது பகுதி சூரிய கிரகணமாகத் தென்படும்.முழு கிரகண நிகழ்வு சுமார் 4 மணி 23 நிமிடங்கள் நீடிக்கும். இந்திய நேரப்படி இந்த நிகழ்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து நேரடியாக இதைப் பார்க்க முடியாது. இருப்பினும், நாசாவின் சமூக வலைதளங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நடைபெறும் நேரலை ஒளிபரப்பின் மூலம் இந்த அரிய நிகழ்வைக் காணலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.