ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் புதிய முடிவா?
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, அந்த நாட்டுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தாக்குதல் நடத்தினார். இதையடுத்து இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.இதனால் ஆத்திரமடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. மேலும், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது.ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச அளவில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஈரான்-அமெரிக்கா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனினும், இதுவரை போர் நிறுத்தம் ஏற்படவில்லை.இந்த சூழலில், ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படாவிட்டாலும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த சில வாரங்களாக போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பல்வேறு வழிகளை டிரம்ப் ஆராய்ந்து வருகிறார்.குறிப்பாக, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படாத நிலையிலும், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டால் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து டிரம்ப் தனது நெருங்கிய ஆலோசகர்களுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பது சர்வதேச எரிசக்தி சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.